Random image

105 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் அறிவிப்பு: சந்திரசேகர ராவ் அதிரடி

ஐதராபாத்:

தெலங்கானா மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நோக்கில், இன்று மதியம்  சட்டமன்றத்தை கலைக்க கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்த நிலையில், 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவரும், முதல்வருமான சந்திர சேகரராவ்.

தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு  வருகின்ற 2019ம் ஆண்டு மே மாதம் வரை பதவிக்காலம் உள்ளது. ஆனால், சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்ட சந்திர சேகர ராவ், இன்று காலை அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமைச்சரவை ராஜினாமா கடிதத்துடன், .  சட்டமன்றத்தை கலைக்க கோரி ஆளுநர் நரசிம்மனை சந்தித்து கடிதம் கொடுத்தார். அதை ஆளுநரும் ஏற்று சட்டப்பேரவையை கலைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அதே சூட்டோடு சூட்டாக, 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளார். இது  எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்திரசேகராவின் அதிரடி நடவடிக்கை காரணமாக எதிர்க்கட்சிகள் மிரண்டுபோய் உள்ளன.