‘அது நேத்து.. இது இன்னைக்கு..’  வதைபடும் வடிவேலு காமெடி…

தெலுங்கானா மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக எதிர்க்கட்சி ஏதும் இல்லாததால், முதல்-அமைச்சர் கே.சந்திரசேகர ராவ், துக்ளக் தர்பார் நடத்துவதாகக் குற்றச்சாட்டு உண்டு.

கொரோனாவால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அரசு கஜானாவில் இருந்து ஊதியம் பெறுவோரின் மார்ச் மாத  சம்பளத்தில் தகுதிக்கு ஏற்றபடி 75 %. 60 % ,50 % என்று  ‘கட்’ செய்தார், முதல்வர்.

ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மட்டத்தில் இந்த சம்பள பிடித்தம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை.

‘’ சுதந்திர இந்தியாவில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளைப் பல மாநிலங்கள் சந்தித்துள்ளன. அப்போது எல்லாம்,  இது போல் எந்த  மாநிலத்திலும் சம்பளம் ‘கட்’ செய்யப்பட்டதில்லை. இது- சட்ட விரோதம்’’ என்று அவர்கள் மனதுக்குள் குமுறுகிறார்கள்.
எனினும் அந்த மாநில காங்கிரஸ் தலைவர் மர்ரி சஷிதர் ரெட்டி, அரசின் அடாவடி போக்கைக் கண்டித்துள்ளார்.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி அமல் படுத்தும் முன்பாக . தெலுங்கானா அரசு பிறப்பித்த முக்கிய ஆணையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த ஆணையில் என்ன கூறப்பட்டுள்ளது தெரியுமா?

‘’ ஊரடங்கைக் காரணம் காட்டி ( அந்த சமயத்தில் தெலுங்கானாவில் ஊரடங்கு அமலில் இருந்தது)  அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களின் ,ஊழியர்கள், தொழிலாளர்கள்  சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. அப்படி பிடித்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று  எச்சரிக்கை விடுத்து இருந்தது.

’’ சம்பளம் பிடிக்கக்கூடாது என்று எச்சரித்த அரசே இப்போது, சம்பளம் பிடித்துள்ளது.இப்போது, யார் மீது, யார் நடவடிக்கை எடுப்பது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார், சஷிதர் ரெட்டி.
முதல்வர் சந்திரசேகர ராவ் வீசிய பூமராங் அவர் மீதே பாய்ந்துள்ளது.

‘’ அது நேத்து சொன்னது.. இது இன்றைக்குச் சொன்னது’’ என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் சமாளிக்கிறது, தெலுங்கானா அரசு.

–  ஏழுமலை வெங்கடேசன்