கூட்டாட்சி அணி : கேரள முதல்வரை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்

தராபாத்

தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் இன்று மாலை கேரள முதல்வர் பிணராயி விஜயனை சந்திக்க உள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.    இன்னும் 2 கட்டங்கள் பாக்கி உள்ளன.   பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வர உள்ளன.   இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக அணிகள் தவிர மாநிலக் கட்சிகள் தனித்து போட்டியிட்டு வருகின்றன.

இவ்வாறு போட்டியிடும் கட்சிகளில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியும் ஒன்றாகும்.  டிஆர் எஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த கட்சி தெலுங்கானாவின் ஆளும் கட்சி ஆகும்.   இந்த கட்சியின் தலைவரும் மற்றும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் தேர்தலுக்கு முன்பிருந்தே மூன்றாம் அணி அமைக்க சென்ற வருடம் முயற்சி செய்தார்.

கூட்டாட்சி அணி என பெயரிடப்பட்ட இந்த அணியில் திருணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி, மஜத மற்றும் திமுக ஆகிய கட்சிகளை இணைக்க அவர் முயன்றார்.   ஆந்திர மாநிலத்தின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார்.   ஆனால் அந்த அணி அமையவில்லை.

இந்நிலையில் சந்திரசேகர் ராவ் இன்று மாலை 6 மணிக்கு கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவருமான பிணராயி விஜயனை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   அப்போது அவர் கூட்டாட்சி அணியின் சார்பில் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத ஒரு ஆட்சியை அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக டி ஆர் எஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர் ராவ் தமிழ் நாட்டில் உள்ள ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபட உள்ளார்.   தேர்தல் அறிவிப்புக்கு பிறகு சந்திரசேகர் ராவ்  காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சி தலைவர் ஒருவரை முதல் முறையாக சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி