ஐதராபாத்

ரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முயற்சி செய்து வருகிறார்

.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் போட்டி இட உள்ளார். ஏற்கனவே தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்த போது இரு கட்சித் தலைவர்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.

பாஜக தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. எனவே தற்போது பாஜக அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறவில்லை.

நாடெங்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது அணியை அமைக்க தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் முயன்று வருகிறார். அதை ஒட்டி வரும் மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவருமான ராமாராவ் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது கூட்டணி அமைப்பது குறித்து இரு தலைவர்களும் பேசி சுமுக முடிவை எட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மூன்றாவது கூட்டணி அமைந்தால் அது தேசிய அளவில் பெரிய மாறுதலைக் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.