தராபாத்

தெலுங்கானா அரசு ஒரு அரசு நிகழ்வில் கலந்துக் கொண்ட 10 பேருக்கு நினைவுப் பரிசுக்காக ரூ.1.66 கோடி செலவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி அன்று தெலுங்கானாவில் காலீஸ்வரம் பகுதியில்  ஒரு நீர்ப்பாசன திட்டத் தொடக்க விழா நடந்தது.  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இதில் தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் 10 பேருக்கு அரசு சார்பில் நினைவு  பரிசாக வெள்ளியில் செய்யப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.   சுமார் 180 கிலோ எடையிலான  அந்த  10 வெள்ளிப்பொருட்கள் வாங்க அரசு தரப்பில் 1.66 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக ஏற்கனவே முன்பணமாக அளிக்கப்பட்ட ரூ.83.43 லட்சத்தைக் கோரி கரீம்நகர் ஆட்சியருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இந்தத் தொகையைக் கடந்த 20 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அளித்துள்ளார்.  இவ்வாறு நினைவுப் பரிசுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது தெலுங்கானா மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.