தெலுங்கானா சட்டசபை மேலவை தேர்தல் :  டி ஆர் எஸ் கட்சியை தோற்கடித்த காங்கிரஸ்

தராபாத்

தெலுங்கானா சட்டசபை மேலவை தேர்தலில் ஆளும் கட்சியான தெலுங்கான ராஷ்டிரிய சமிதியின் ஆதரவு பெற்ற மூவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த  ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.   ஆந்திரா, தெலுங்கானா என 2014ஆம் வருடம் இரண்டாக பிரிந்த பிறகு தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து தேர்தல்களிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி ஆர் எஸ்) தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது.    கடந்த டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்தக் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை வென்றது.

கடந்த 22 ஆம் தேதி நடந்த தெலுங்கானா சட்டசபையின் மேலவை தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.   இதில் டி ஆர் எஸ் ஆதரவு பெற்ற மூவரும் முதன்முறையாக தோல்வி அடைந்துள்ளனர்.   அவர்களை காங்கிரஸ் –கம்யூனிஸ்ட் கூட்டணியின் ஆதரவு பெற்றுள்ளவர்கள் வென்றுள்ளனர்.   இதில் இருவர் ஏற்கனவே மேலவை உறுப்பினர் பதவியில் இருந்தவர்கள் ஆவார்கள்

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் ரெட்டி கரிம்நகர் – அடிலாபாத் – நிசாமாபாத் – மேடக் பட்டதாரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட டிஆர்எஸ் ஆதரவு வேட்பாளர் சந்திரசேகர் கவுத் என்பவரை 39,430 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ரகோத்தமன் ரெட்டி கரிம்நகர் – அடிலாபாத் – நிசாமாபாத் – மேடக் ஆசிரியர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மேலவை உறுப்பினர் பட்டூரி சுதாகர் ரெட்டியை வென்றுள்ளார்.

டி ஆர் எஸ் கட்சி ஆதரவு பெற்ற முன்னாள் மேலவை உறுப்பினர் ரவீந்தர் என்பவர் நலகொண்டா – கம்மம் – வாரங்கல் ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற நாசி ரெட்டி என்பவரிடம் தோற்றுள்ளார்.