அர்னாப் கோஸ்வாமி மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்த தெலுங்கானா எம் பி

டில்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த கருத்துக்காக அர்னாப் கோஸ்வாமி மீது தெலுங்கானா மக்களவை உறுப்பினர் ரேவந்த் ரெட்டி சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் பத்திரிகையாளரும் தொலைக்காட்சி நெறியாளருமான அர்னாப் கோஸ்வாமி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பற்றி தவறாகப் பேசி உள்ளார்.  இது குறித்து நாடெங்கும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.   அவர் கூறிய கருத்துகளுக்காக அவர் மீது சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உள்ளிட்ட பல மாநிலங்களில் புகார் பதியப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மல்காஜ்கிரி மக்களவை தொகுதி உறுப்பினரான ரேவந்த் ரெட்டி அந்த பகுதி காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.   சமீபத்தில் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர், “ரிபப்ளிக் டிவியில் கடந்த 21 ஆம் தேதி அன்று ஒரு நேரடி நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது.  அந்த டிவியின் அர்னாப் கோஸ்வாமி அந்நிகழ்வில் ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினர் சோனியா காந்தி மீது அவதூறு கருத்துக்களைக் கூறி உள்ளார்.  சோனியா காந்தி மக்களவை உறுப்பினர் மட்டுமல்லாமல் சுதந்திரத்துக்காகப் போராடிய மிகப் பழமையான காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார்.

அவர் இந்நாட்டில் கடந்த 50 வருடங்களாக வசித்து வருவதுடன் தனது கணவர் மற்றும் மாமியாரை இந்நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக நடந்த வன்முறையில் இழந்தவர் ஆவார்.   நீங்கள் இந்த அவையின் தலைவர் என்னும் முறையில் அவையின் அனைத்து உறுப்பினர்களின் மதிப்பு மற்றும் அவையின் மரியாதையைக் காக்கும் பொறுப்பில் உள்ளீர்கள்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஒரு மூத்த உறுப்பினர் மீது நடந்த உரிமை மீறல்குறித்து தீர்மானம் இயற்ற வேண்டும் என மக்களவை உறுப்பினர் என்னும் முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.   குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஒரு முடிவு கொண்டு வர வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.”எனத் தெரிவித்துள்ளார்

கார்ட்டூன் கேலரி