ஐதராபாத்: மே மாதம் 12ம் தேதி, ஐதராபாத்தில் நடந்துமுடிந்த ஐபில் இறுதிப்போட்டியில், தெலுங்கானா மாநிலத்தின் உயரதிகாரி ஒருவர் 300 இலவச டிக்கெட்டுகளை, அதிகாரிகளுக்காக வழங்குமாறு வலியுறுத்திய விஷயம் தற்போது மெமோ வழங்கும் அளவிற்கு பிரச்சினையாகியுள்ளது.

மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் மாவட்ட அதிகாரியான கே.பிரதீப் ராவ் என்பவர், ஐதராபாத்தின் கிரிக்கெட் சங்கத்தின் முதன்மை நிர்வாக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், 50 காம்ப்ளிமென்டரி கார்பரேட் பாக்ஸ் இலவச டிக்கெட்டுகளும், 250 இதர சலுகை இலவச டிக்கெட்டுகளும் கேட்டுள்ளார்.

இந்த விவகாரம்தான் தற்போது பிரச்சினையாகியுள்ளது. மே மாதம் 9ம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், அஞ்சல்தலை மற்றும் முத்திரை இடப்பட்டுள்ளது.

ஆனால், தனது கடிதத்தை நியாயப்படுத்தியுள்ள அந்த அதிகாரி, கிரிக்கெட் போட்டிகளின்போது இதுபோன்று பலபேர் டிக்கெட் கேட்கிறார்கள் என்றும், இந்திய கிரிக்கெட் வாரியமே, இதுபோன்ற வேண்டுகோள்களை விடுக்கலாம் என கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.