டிஜிட்டல் மயமாகிறது தெலுங்கானா : கூகுள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐதராபாத் :

தெலுங்கானாவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக அம்மாநில அரசு  கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.
தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் மற்றும் கூகுள் இந்தியா நிறுவன அதிகாரிகள் இடையிலான சந்திப்பு இருதினங்களுக்குமுன் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது தெலுங்கானாவை டிஜிட்டல் மாநிலமாக்கும் பொருட்டு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகதுக்கும் கூகுள் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த அடிப்படையில் தெலுங்கானா அரசின்  இணையதளங்களை பொதுமக்கள் எளிதாக மொபைலில் பயன்படுத்தும்  வகையில்  ஏற்பாடு செய்யப்பட உள்ளது, மேலும் பொறியியல் மற்றும் எம்.சி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு பயிற்சி அளிக்கும் திறன் மேம்பாட்டு புதிய ஆப் உருவாக்கப்பட உள்ளது.

இவை மட்டுமல்லாது கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறையுடன் இணைந்து பாரம்பரிய சின்னங்களுக்கான டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்குவது, கிராமப்புற பெண்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவது உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான அம்சங்கள் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளன.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.டி. ராமாராவ், தெலங்கானா மாநிலம் விரைவில் டிஜிட்டல்மயமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.