தெலுங்கானா : காலியாகும் சந்திரசேகர் ராவ் கட்சி

தராபாத்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து பல தலைவர்கள் விலகி காங்கிரஸில் சேருகின்றனர்.

தெலுங்கானாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர் ராவ் சட்டப்பேரவையை முன் கூட்டியே கலைத்து உத்தரவிட்டார். இதை ஒட்டி அந்த மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியால் அந்தக் கட்சி பலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சந்திரசேகர் ராவின் டி ஆர் எஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அக்கட்சியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ்வேஸ்வர் ராவ் வரும் 23 ஆம் தேதி மிட்சலில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய உள்ளார். அவருடன் சாவெல்லாவை சேர்ந்த தெலுங்கானா மேலவை உறுப்பினர் மாதவ ரெட்டியும் காங்கிரசில் இணைய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அந்தக் கட்சியில் இருந்து மேலும் 1 மாநிலக்களவை உறுப்பினர், ஒரு மக்களவை ஒருப்பினர் மற்றும் 3 எம் எல் ஏக்கள் மற்றும் 2 எம் எல் சிக்கள் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.