கடவுளுக்குக் குடியுரிமை அளியுங்கள் : அர்ச்சகரின் அதிசய வேண்டுகோள்

சில்குர்

டவுளுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என சில்குர் பாலாஜி கோவில் தலைமை அர்ச்சகர் சி எஸ் ரங்கராஜன் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீப காலமாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.   இந்த புதிய சட்டத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.   இதில் இஸ்லாமியரை சேர்க்காததை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் சில்குர் பாலாஜி கோவில் தலைமை அர்ச்சகர் சி எஸ் ரங்கராஜன் புதிய பரபரப்பைக் கிளப்பி உள்ளார்.   அவர், “கடவுளர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒரு அர்ச்சகர் அல்லது அறங்காவலர் கடவுளுக்குப் பதிலாகப் பங்கு பெற முடியும்.   இதே நிலை மைனர் குழந்தைகளுக்கும் உள்ளது.  எனவே, சட்ட மொழியின்  படி ஒவ்வொரு கடவுளும் மைனர் எனக் கொள்ளலாம்.

புதிய குடியுரிமைச் சட்டத்தின்படி சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிமுறை செய்யப்பட்டுள்ளது.  இது மைனர்களுக்கும் பொருந்தும்.  எனவே நீண்ட காலமாக நமது நாட்டிலேயே வசிக்கும் கடவுளுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் சபரிமலை கோவில் குறித்து அளித்த தீர்ப்பில் பருவப் பெண்கள் ஐயப்பனை வணங்கக் கூடாது எனச் சொல்ல முடியாது எனவும் அவ்வாறு சொல்லக் கடவுளுக்கும் சட்டப்படி உரிமை கிடையாது எனவும் தீர்ப்பளித்தது.  தான் இருக்குமிடத்துக்கு யார் வர வேண்டும் எனத் தீர்மானிக்க குடியுரிமை இருக்க வேண்டும்.

எனவே ஒவ்வொரு கோவிலில் உள்ள கடவுள்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்துள்ள சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க புதிய சட்டம் இடம் அளித்துள்ளது.   நமது கடவுள்களும் சிறுபான்மையினரே.   அத்துடன் அவர்கள் இந்நாட்டை சேர்த்தவர்கள்.  இந்த குடியுரிமை முதலில் ஐயப்பனுக்கு அளிக்க வேண்டும்.   அப்போதுதான் அவரால் தனது நைஷ்டிக பிரம்மச்சரிய விரதத்தைத் தொடர முடியும்: எனத் தெரிவித்துள்ளார்.