மார்ச் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் கொடுமை மக்களை வாட்டி வதைக்கிறது.கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. பல நகரங்களில் நேற்று 104 டிகிரியில் இருந்து 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதுவரை இந்த அளவு வெப்பத்தை அனுபவிக்காத மக்கள் இப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.கடும் வெப்பம் காரணமாக சென்னையில் அனல் காற்று வீசுகிறது. வாகனங்களில் செல்வோர் வெப்பத்தால் கடும் அவதிப்படுகிறார்கள். பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
 
சதமடித்த வெயில்:
 

century
சென்னை, சேலம், மதுரை மற்றும் திருச்சி நகரங்களில் ஏப்ரல் 14 முதல் இருந்த வெப்பநிலை மற்றும் அடுத்த ஒரு வாரம் என்ன வெப்பநிலை என்பதை அறிய இந்தப் படத்தினை சொடுக்கவும்

 
ஜோலார்பேட்டையில் வெயில் கொடுமைக்கு லாரி ஓட்டுநர் பலி:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அமராவதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 42; லாரி டிரைவர். இவர், கடந்த வாரம் பொள்ளாச்சியில் இருந்து அசாம் மாநிலத்துக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றார். அங்கு சரக்குகளை ஒப்படைத்து விட்டு, நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய மோகன்ராஜ், அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். வெயில் அதிகம் இருந்ததால், சுருண்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு, 9 மணிக்கு மோகன்ராஜ் இறந்தார்.
குளிர்ந்த பீர் விற்பனை அதிகரிப்பு:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. அதிகபட்சமாக 107 டிகிரி பதிவானது. வெயிலின் அனல் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக நீர்ச்சத்து உள்ள குளிர்பான கடைகளை நாடி செல்கின்றனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் குளிர் பானங்கள், தர்பூசணி, முலாம்பழம் விற்பனையும் அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 283 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வழக்கமாக ‘ஹாட்’ மதுபானங்களின் விற்பனையே அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குடிமகன்கள் குளிர்ந்த பீர் குடிப்பதையே விரும்புகின்றனர். மாவட்டத்தில் கடந்த வாரம் பீர் விற்பனை 1500 பெட்டிகளும், ஹாட் மதுபானங்கள் விற்பனை 700 பெட்டிகளாகவும் இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக பீர் விற்பனை தினமும் 3 ஆயிரம் பெட்டிகள் விற்பனை ஆகிறது. இதன் மூலம் நாள்தோறும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதேநேரத்தில் மதுபானங்கள் விற்பனை 500 பெட்டிகளாக குறைந்துள்ளது.
வெயில் கொடுமை தாளாமல் வீட்டுக்குள் புகுந்த பாம்பு:
ஈரோடு: ஈரோடு அருகே பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32, ஜவுளி நிறுவன தொழிலாளி. மனைவி காயத்ரி. இவர்களின் சமையல் அறையின் உடைந்த ஜன்னல் வழியாக, வீட்டுக்குள்  கருஞ்சாரை இனத்தை சேர்ந்த பாம்பு, ஆறடி நீள பாம்பு புகுந்தது. தீயணைப்புத் துறையினர் பாம்பு பிடிப்பதில் வல்லவரான, ஊர்காவல்படை வீரர் யுவராஜை அனுப்பி வைத்து, ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவர், பாம்பைப் பிடித்தார். வெயில் காலம் என்பதால் பாம்புகள், குளிர்ச்சியான பகுதிகளை தேடி வரும்.
மதுரையில் ஒருவர் பலி:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள சித்திரை வீதியில், வெயில் கொடுமை தாங்காமல் முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் எந்த யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக அளவாக ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு நகர மக்கள் இந்த கடும் வெயிலால் பெரும் தவிப்புக்குள்ளாகினர். அடிக்கும் வெயிலைப் பார்த்தால் 110 டிகிரி அளவுக்கு இருக்கும் என்று கூறும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. அதேபோல திருச்சியில் 103, திண்டுக்கல்லில் 102, சேலத்தில் 101, திருப்பூரில் 101, மதுரை, கோவை, வேலூர் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் 95 டிகிரி அளவில்தான் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. ஆனால் அடிக்கும் வெயிலைப் பார்த்தால் 105 டிகிரி என்று சொல்லும் அளவுக்கு சுட்டெரிக்கிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அவ்வப்போது இதமான காற்று வீசுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரிக்கும் கீழே வெயில் இருந்தாலும் கூட சுட்டெரிக்கிறது வெப்பம்.
 
ஜெயலலிதா “பலி” கணக்கு:
உச்சி வெயில் நேரங்களில், ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு பலியானவர்களின் எண்ணிக்கை தனிக் கணக்கு. அது இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.