கேரளாவில் கொரோனாவுக்கு கோயில்…

கொரோனா வைரஸ் உலகில் இருந்து விடை பெற்றுச் சென்றாலும் ,கொஞ்சகாலம் அதன் பெயரை உச்சரிக்கும் வகையில் சில பதிவுகளை விட்டுச்செல்லும் என்றே தெரிகிறது.

ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘லாக்டவுண்’’ கொரோனாகுமார்’ ‘கொரோனாகுமாரி’’ என சில பெற்றோர் பெயர் சூட்டி அழகு பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா ‘பக்தர்’ ஒருவர் அந்த வைரசுக்குக் கோயில் ஒன்றையே கட்டியுள்ளார்.

அங்குள்ள கடக்கல் பகுதியைச் சேர்ந்த அனிலன் என்பவர் தான் அந்த ‘’கொரோனா பக்தர்’’.

தனது வீட்டுக்குப் பக்கத்தில், கொரோனாவின் கோர வடிவத்தைச் சித்தரிக்கும் வகையில் ‘சிலை’ அமைத்து அந்த ‘சிலை’க்கு ‘’கொரோனா தேவி’’ என்று பெயர் வைத்துள்ளார், அனிலன்.

கொரோனா தேவிக்கு தினமும் பூஜை நடத்தும், அனிலன் ஆனால் ‘’யாரும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது’’ என்று தெளிவாகக் கூறிவிட்டார்.

‘’ மனிதர்களைப் பெரிதும் பாதிக்கும் நோயான ’அம்மை’’ நோய்க்குக் கேரளாவில் பல இடங்களில் சிலைகள் உள்ளன. கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் அல்லவா? அதுபோல் இந்த வைரசும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதால்,இதனை அம்மனாக நினைத்து வழி படுவதில் தவறு இல்லை’’ என்பது கொரோனா பக்தர் அனிலனின் வாதம்.

–  பா.பாரதி