கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டுக்காக வழங்க கூடாது! தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக வி.பி.ஆர்.மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், சென்னை நீலாங்கரை சக்தி முத்தம்மன் கோவில் நிலங்களை அரசு தவறாக பயன்படுத்துவதாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  மனுவில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அறநிலையத்துறை, தன்னிச்சையாக நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மகாதேவன் இன்று தீர்ப்பு வழங்கினார்.  அதில்,  கோவில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையை செலுத்த வேண்டும் எனவும் கோவில் நிலங்களை கோவில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டதுடன்,  கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.