டில்லி

தினமும் சரிந்து வரும்  பொருளாதாரத்தைச் சரி செய்ய வேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கான அயோத்தி வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   அந்த தீர்ப்பின் படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது.   அத்துடன் மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்களுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூத்த பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி தனது வெளிப்படையான கருத்துக்களால் பல முறை பாஜக அரசுக்கு சங்கடமான நிலையை அளித்துள்ளார்.  அதை அவர் இன்றும் தொடர்ந்து வருகிறார்.   இவ்வகையில் தற்போது ஒரு டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில், “ தற்போது ராமர் கோவில் கட்டுவது என்பது தன்னியக்க செயல் ஆகி விட்டது.  இனி தினமும் ஏற்படும் பொருளாதார சரிவை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதிலும் முன்னேற்ற நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்” எனப் பதிந்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்து வருவதாகப் பலரும் தெரிவித்து வரும வேளையில் பாஜக அமைச்சர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் உள்ளனர்.  இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி இந்த டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.