ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து கோவில்கள் திறக்கலாம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று இந்து கோயில்களை பக்தர்களின் தரிசனத்துக்காக இரவு திறக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து கோவில்களை திறக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கோவில்களில் இரவில் திறக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 1ந்தேதி புத்தாண்டு பிறக்கும்போது இந்துக்கோவில்கள் திறக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், இது தொடர்பாக இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அசுவந்தாமன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், இந்து ஆகம விதிப்படி,  இந்துக்கோவில்களில்  இரவு 9 மணிக்கு  நடை அடைக்கப்பட வேண்டும் என்றும் சில நேரங்களில் அர்த்த ஜாம பூஜைகளின்போது மட்டுமே நடை திறக்கப்படலாம், பின்னர் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடை திறக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும்,  ஆந்திராவில் இரவு நேரங்களில் கோவிலின் நடை திறக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டியிருந்தார். அதுபோல தமிழகத்தில் உள்ள இந்துகோவில்களிலும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு கோவில் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்திய ஒருமைப்பாட்டின் மூலக்கல்லாக வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற அமர்வுகளின்    தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தவர்கள், புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு கோவில்களை திறந்து வைக்கலாம் என்றும்,  ஆந்திராவில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தமிழக மாநிலத்திற்கு கட்டுப்படாது என்பதை பெஞ்ச் தெளிவுபடுத்தியதுடன், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.