சென்னை

வாடகைக்கு வீட்டில் குடியிருப்போர் தற்போது நல்ல வசதிகளுடன் கூடிய இடங்களையே விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வசதியான இடங்கள் என்றதும்,  போயஸ் கார்டன், போட் கிளப்,  ராஜா அண்ணாமலை  புரம் போன்ற இடங்கள் நினைவுக்கு வரும்.   ஆனால் அவைகள் வசதியானவர்கள் வசிக்கும் இடம் மட்டும் தான் என்றும்,   வாடகைக்கு குடியிருப்போருக்கு தேவையான வசதிகள் அங்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.   இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதுள்ள நிலையில் எழும்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.  இந்த இடங்களில், நீச்சல் குளம் உடற்பயிற்சி மையம் என பல வசதிகளும் இந்த வளாகங்களில் உள்ளேயே அமைந்துள்ளன.   எனவே இந்த இடங்களையே வாடகை வீட்டில் வசிப்போர் விரும்புகின்றனர்.    ஆழ்வார்ப்பேட்டை,  ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளை விட இந்த இடங்களே பலராலும் விரும்பப்படுகின்றன.  சென்னை ரியல் எஸ்டேட் தரகர் சங்க தலைவர் இதையே ஆமோதிக்கிறார்.

வீட்டுத் தரகர்களில் ஒருவரான மோகன் தன்னிடம் போட் கிளப் பகுதியில் அனைத்து வசதிகளுடனும் (fully furnished) கூடிய ஒரு குடியிருப்பு யாரும் வாடகைக்கு வராமல் உள்ளதாக கூறுகிறார்.  மேலும் அவர், “சுமார் 2750 சதுர அடி உள்ள அந்தக் குடியிருப்புக்கு ரூ.2.75 லட்சன் வாடகை தேவை என உரிமையாளர் ஒரு வருடம் முன்பு தெரிவித்திருந்தார்.   யாரும் வராததால் தற்போது வாடகையில் ரூ. 1 லட்சம் குறைத்துள்ளார்.  அப்படி இருந்தும் யாரும் வரவில்லை” என தெரிவித்துள்ளார்.

வசதியானவர்கள் வசிக்கும் பகுதியில் வாடகை குறைந்து வரும் நேரத்தில்,  முகப்பேர், போரூர், பல்லவரம் போன்ற பகுதிகளில் வாடகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.    சென்னையின் மேற்குப் புறநகர் பகுதியில் அம்பத்தூரில் வாடகை மிகவும் உயர்ந்து வருகிறது.    அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவர், “கடந்த ஐந்து வருடங்களில் அம்பத்தூரில் வீட்டு வாடகை 50%க்கும் மேல் அதிகறித்துள்ளது.   ஆனால்  முக்கிய வசதிகளான நிலத்திடி கழிவுநீர்க் குழாய்கள் வசதி போன்றவை கூட இங்கில்லை.” எனத் தெரிவிக்கிறார்.

சென்னை மாநகர் மேலும் விரிவாக்கப்படும் என வந்துள்ள செய்திகளால் புறநகர் பகுதிகளில் வாடகை உயர்வு சாதாரண விஷயமாகி விட்டதாக பலரும் தெரிவிக்கின்றனர்.  மொத்தத்தில் வசதியானவர்கள் வசிக்கும் பகுதி என்பது வசதிகளுடன் உள்ள பகுதிகள் இல்லை என வாடகைக்கு குடியிருப்போர் தெரிவிக்கின்றனர்.