சிட்னி: கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்ட்டனுக்கு எதிராக தான் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் முடிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தத்தை மீறிய காரணத்திற்காக அந்த நிறுவனம் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதால், ஆஸ்திரேலியாவின் ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளார் டெண்டுல்கர்.
கடந்த 2016ம் ஆண்டு ஸ்பார்ட்டன் நிறுவனத்துடன், அதன் விளையாட்டு உபகரணங்களை விளம்பரம் செய்யும் வகையில் ஒப்பந்தத்தில் இணைந்தார் டெண்டுல்கர். ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, தனக்கு சேர வ‍ேண்டிய பணப்பலன்களை அந்நிறுவனம் முறையாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் டெண்டுல்கர்.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்நிலையில், தனது செயலுக்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
“ஒப்பந்த ஷரத்துகளை நிறைவேற்றுவதில் எங்களது தோல்விக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு டெண்டுல்கர் காட்டியப் பொறுமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றுள்ளது அந்நிறுவனம்.