மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் மீது வழக்குத் தொடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

தனது 24 ஆண்டுகால நீண்ட கேரியரில், மொத்தம் 34000 சர்வதேச ரன்கள் மற்றும் 100 சதங்களையும் அடித்துள்ள டெண்டுல்கரின் படங்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக ஆண்டிற்கு குறைந்தபட்சம் $1 மில்லியன் ராயல்டி தந்துவிடுவதாகவும் ஒப்பந்தம் செய்திருந்தது அந்த நிறுவனம்.
இந்த ஒப்பந்தம் கடந்த 2016ம் ஆண்டு போடப்பட்டது.

இதன்பொருட்டு, லண்டன் மற்றும் மும்பை போன்ற இடங்களில் நடைபெற்ற விளம்பர நடவடிக்கைகளிலும் பங்கேற்றார் டெண்டுல்ர். ஆனால், சொன்னபடி அந்த நிறுவனம் பணத்தை வழங்கவில்லை.

டெண்டுல்கர் முறையாக கேட்டுப்பார்த்தும் எ‍துவும் நடக்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட டெண்டுல்கர், தனது படம் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தக்கூடாது என்றார். ஆனால், அந்த நிறுவனம் எதையும் கேட்பதாக இல்லை.

இதனையடுத்து, அந்த நிறுவனம் மீது, 2 ஆண்டுகளுக்கான $2 மில்லியன் ராயல்டி தொகையைக் கேட்டும், தனது படம் உள்ளிட்ட சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரியும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.