ஆண்களே, அழுவதின் மூலம் துணிச்சலை வெளிப்படுத்துங்கள்: சச்சின் டெண்டுல்கர்

மும்பை: ஆண்கள் அழுவதில் தவறொன்றுமில்லை என்றும், அழுது சோகத்தை வெளிப்படுத்துவதன் மூலம், தங்களின் துணிச்சலையும் வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.

சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி அவர் கூறியுள்ளதாவது, “இந்த சமூகத்தில் ஆண்கள் என்றால் அழக்கூடாது என்ற ஒரு எழுதப்படாத விதி உண்டு. அழும் ஆண்கள் பலவீனமானவர்கள் என்ற கற்பிதத்திலேயே வளர்க்கப்பட்டோம். இந்த முறையில்தான் நானும் வளர்க்கப்பட்டேன்.

ஆனால், இதை தவறு என்று உணர்வதால் இப்போது இதை எழுதுகிறேன். ஒரு ஆண் சோகத்தை வெளிப்படுத்துவதற்கு அதிக துணிச்சல் தேவை. எனவே, பழமையைக் கைவிட்டு உங்களின் சோகத்தை துணிச்சலாக வெளிப்படுத்துங்கள்.

உங்களின் அழுகையே உங்களை பலமானவராகக் காட்டுகிறது. எனவே, அதை மறைக்கத் தேவையில்லை. கடந்த 2013ம் ஆண்டு நான் ஓய்வுபெறுகையில், கடைசிமுறையாக மைதானத்திலிருந்து பெவிலியன் திரும்புகையில், எனது சோகத்தை அடக்கமாட்டாமல் அழுது வெளிப்படுத்தியபோதுதான், நான் என்னை பலமானவனாக உணர்ந்தேன். அப்போதுதான் ஒருவித நிம்மதியும் கிடைத்தது” என்றுள்ளார்.