46 வயதைக் கடந்த சச்சின் டெண்டுல்கர் – சில நினைவலைகள்

மும்பை: இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது 46வது வயதை இந்தாண்டில் நிறைவுசெய்யும் தருணத்தில், அவரின் சில சிறந்த ஆட்டங்கள் குறித்த சிறிய நினைவலைகள் நம் எண்ணங்களில் மோதிச் செல்கின்றன.

தனது 24 வருட கிரிக்கெட் வாழ்வில், ஏராளமான பேட்டிங் சாதனைகளை முறியடித்துள்ளார் டெண்டுல்கர்.

எப்போதும் நினைவில் நிற்கும் அவரின் சில ஆட்டங்கள்

* கடந்த 1998ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷார்ஜாவில் நடந்த ஒருநாள் போட்டியில், இவர் ஆடிய ‘பாலைவன புயல்’ ஆட்டம், இன்றளவும் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸாக பலரால் வர்ணிக்கப்படுகிறது. அப்போட்டியில் இவர் எடுத்த 143 ரன்களால் இந்தியா வென்றது.

* கடந்த 2003-04ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் ஒரு இன்னிங்ஸில் இவர் அடித்த 241 ரன்கள், அப்போட்டியை டிரா செய்ய உதவியது.

* கடந்த 2003ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இவர் எடுத்த 98 ரன்கள், போட்டியை வெல்ல உதவியது.

* கடந்த 1996 – 97ம் ஆண்டுகளில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் 529 ரன்கள் எடுத்த தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பிய நிலையில், இவர் எடுத்த 169 ரன்கள் மிகவும் முக்கியமானது.

* கடந்த 2010ம் ஆண்டு, குவாலியரில், தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில், இவர் முதன்முதலாக 200 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில், முதல் இரட்டை சதம் அடித்த பேட்ஸ்மேன் இவரே.

– மதுரை மாயாண்டி