“கிரிக்கெட்டை விட்டே விலகும் மனநிலையில் இருந்தார் சச்சின் டெண்டுல்கர்”

கேப்டவுன்: தான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற காலத்தில், கடும் மனஉளைச்சலில் இருந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டை விட்டே விலகி விடலாம் என்ற முடிவில் இருந்ததாக கூறியுள்ளார் இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர் என்று புகழப்படும் கேரி கிர்ஸ்டன்.

கிரேக் சேப்பல் என்ற இந்திய அணியின் மோசமான பயிற்சியாளர் விலகிய பிறகு, பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்தார் கேரி கிர்ஸ்டன். அப்போதுதான், இந்திய அணியில் மகேந்திரசிங் தோனியின் யுகமும் தொடங்கியது.

இவர் காலத்தில் இந்திய அணி 2007ம் ஆண்டின் டி-20 உலகக்கோப்பை மற்றும் 2011ம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது. டெஸ்ட் & ஒருநாள் அரங்கில் நம்பர் 1 இடத்தைப் பெற்றது.

கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளதாவது, “சச்சினுடன் எனது பயணம் நீண்டது. தொடக்கத்தில், இவரின் மனநிலை கிரிக்கெட்டை விட்டே சென்றுவிடலாமா? என்னும் நிலையில் இருந்தது. அவர் மனதில் உளைச்சலும் சோர்வும் மிகுந்திருந்தது.

அவரின் இடம் மாற்றப்பட்டதால், அவர் நினைத்தபடி ஆடமுடியாமல் தவித்தார். ஆனால், நான் அவருடைய விருப்பமான இடத்தில் மீண்டும் ஆட வைத்தேன். அவருக்கு எதுவும் சொல்லித்தர வேண்டியதில்லை.

அவர் என்ன விரும்பினாரோ, அதை மட்டும் செய்தோம். அதன்பிறகு, அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 19 சதங்களை அடித்து அசத்தினார்” என்றுள்ளார் கேரி கிர்ஸ்டன்.