மாநிலத்தின் 33வது மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம்! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

தென்காசி:

நெல்லை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற தமிழகஅரசு, நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்த நிலையில், இன்று தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசியில் ஆசாத்நகரை அடுத்துள்ள இசக்கி மகால் வளாகத்தில்  நடைபெற்ற விழாவில்  தொடங்கி வைத்தார்.

தென்காசியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், துணைமுதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில், புதிய மாவட்டத்தையும், அதன் நிர்வாக பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி  வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பெரிய  மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக தமிழகஅரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி,  கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உதயமாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களுக்கான ஆட்சித் தலைவர் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று தென்காசி மாவட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு உள்ளது.

தென்காசியை தலைமையிடமாக கொண்ட இந்த மாவட்டத்தில், தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்கள், 5 சட்டசபை தொகுதிகள், 8 தாலுக்காக்கள் அதாவது, தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் இந்த மாவட்டத்தில் அடங்கும்.

சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதிய மாவட்டத்திற்கு கலெக்டராக ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் மற்றும் எஸ்பி சுகுணாசிங் உள்ளிட்டோரை தமிழக அரசின் தலைமை செயலாளர் நியமித்து  உள்ளது குறிப்பிடத்தக்கது.