போர்க்களமானது அலங்காநல்லூர்! 22பேர் காயம்!! போலீசார் கொடி அணிவகுப்பு

அலங்காநல்லூர்,
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்கா நல்லூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றியது. தமிழக முதல்வர் நானே அலங்கா நல்லூர் சென்று வாடிவாசல் திறந்து வைப்பேன் என்று கூறினார்.
ஆனால், நிரந்தர தீர்வுதான் வேண்டும், அவசர சட்டம் தேவையில்லை என்று அந்த பகுதி மக்கள் முதல்வரை அலங்காநல்லூர் வர அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக வாடிவாசலை திறந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாமல் ஓபிஎஸ் திரும்பினார்.

மேலும், அலங்காநல்லூர் மக்கள் விரும்பும்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று காலை முதலே போராட்டக்காரர்களை கலைந்துசெல்ல போலீசார் கூறி வந்தனர்.

இதற்கிடையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் வரும் பிப்ரவரி 1-ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த சிலர் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதன் காரணமாக போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீஸார் 30 நிமிடம் கெடு விதித்தனர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை.
இதனையடுத்து வலுக்கட்டாயமாக கூட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே திடீரென மோதல் மூண்டது.
இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். ஓரமாக அமர்ந்திருந்த பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியால் அவர்களுன் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது,

 

இதனையடுத்து அங்கு குழுமியிருந்த மக்கள் கற்களை வீசி காவல்துறையினரை தாக்க துவங்கினர். பதிலுக்கு காவல்துறையினரும் கற்களை வீசி தாக்கினர். கல்வீச்சை அடுத்து அலங்காநல்லூரில் இருந்து போலீஸ் வாகனங்கள் வெளியேறின.
கல்வீச்சில் காயமடைந்த இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மோதலின் போது நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் 22-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் அலங்காநல்லூரில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அலங்காநல்லூர் பகுதி முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஐஜி சோமானி தலைமையில் அங்கு கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

You may have missed