முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றம் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் – பதற்றம் நீடிப்பு…

யாழ்ப்பாணம்: பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (ஜாஃப்னா) அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அகற்றப்பட்டுள்ள சம்பவம் இலங்கை மட்டுமல்லாது தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றப்பட்டதை கண்டித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழ் மாணாக்கர்கள்,  போராட்டத்தில் குதித்துள்ளனர். இது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. இதை பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவின் பேரில், நள்ளிரவு  இடித்து அகற்றப்பட்டது. இது அங்கு வாழும் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதன் காரணமாக அப்பகுதியில் பொது மக்கள் அதிக அளவில் கூடுவதாலும், மாணாக்கர்கள்  உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி இருப்பதாலும் ப தற்றமான ஒரு சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் காவல்துறையினரும், ராணுவமும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். இரவில் இருந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது., தற்போது வரை அப்போராட்டம் கைவிடப்படாமல் நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையில்  யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

போராட்டத்தை சுற்றி  ஆயுதம் தாங்கிய அதிரடிப் படையினர்,  இராணுவத்தனர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.