கோவை:

கோவை பாஜக மாவட்ட தலைவர் மற்றும்  இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  இதன் காரணமாக கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்து அமைப்பு சார்பில், ராமராஜ்யம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத யாத்திரை நடந்து வருகிறது. இந்த யாத்திரை நேற்று தமிழகத்தில் நெல்லை மாவட்டம் வந்தது. இன்று மதுரை வரும் ரதம் தொடர்ந்து ராமேஷ்வரம் செல்கிறது.

இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி தமிழக எதிர்க்கட்சியின் கோரிக்கை விடுத்தும், அரசு தடை விதிக்க மறுத்ததால், பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை சிங்காநல்லூரில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக அவரது விட்டின் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து கோவை  பீளமேடு காவல்நிலையத்தில் நந்த குமார் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில்,  கோவை – செல்வபுரத்தில் இந்து முன்னணி பிரமுகம் உமாபதி என்பவரின் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோவையில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 7ம் தேதி பாஜக மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.