மதுரை:

துரையில் செயல்பட்டு வரும்  விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி இன்று தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மதுரையில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

போராட்டக்காரர்கள் பல இடங்களில் கடைகளை அடைக்க வலியுறுத்தியும், பேருந்துகள் மீது கற்களை வீசியும் உள்ளதால் பல இடங்களில் பதட்டம் நிலவு கிறது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், அவரது வரலாற்றை 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி  தேவரின் தேசபக்தி பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி இன்று மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை முன்பாக கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல இடங்களில் தேவர் சமுதாயத்தினர் மதுரை வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட வரும் தேவர் அமைப்பினர் ஆங்காங்கே கடைகளை மூடச்சொல்லி வலியுறுத்தி வருவதால் பல இடங்களில் பதட்டம் நிலவுகிறது.

அண்ணா, பெரியார், மாட்டுத்தாவணி, பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட சென்றவர்கள், மற்றும்  . வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற வர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில்  தல்லாகுளம் வள்ளுவர் காலனியில் அரசுப் பேருந்து மீது  மர்ம நபர்கள் கல்வீசினர். இதனால் பஸ்சின் கண்ணாடி உடைந்துநொறுங்கியது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

தேவர் அமைப்பினர் போராட்டம் காரணமாக மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  பதற்றம் நிலவுவதால் கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான ஓட்டல்கள் டீக்ககடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை மற்றும் பழக்கடை சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதை அடுத்து காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.