ஆர்.கே.நகரில் பதற்றம்: டிடிவி கார்மீது கல்வீச்சு…. அதிமுக -அமமுக இடையே மோதல்….!

சென்னை:

சென்னையில் உள்ள  ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க – டிடிவியின்  அ.ம.மு.க தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர்  கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் போலீசார் உள்பட பலர் காயம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டி.டி.வி.தினகரன் இருக்கிறார். தேர்தல் சமயத்தில் அவர் ரூ.20 நோட்டை கொடுத்து, பின்னர் பணம் தருவதாக ஏமாற்றி வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் தொகுதிக்குள் வரும்போது, அவருக்கு எதிராக 20ரூபாய் நோட்டை காட்டி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். . ஏற்கனவே பல முறை அவருக்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவிக்கு எதிராக, அவரது கார் மீது கல் வீசப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

தொகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்துக்கு டிடிவி வந்தபோது, அவருக்கு எதிராக    மதுசூதனன்  ஆதரவாளர்கள் கல் வீசித் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களும் பதிலுக்கு கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீச்சுக்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி களேபரமாக மாறியது.  அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி,  கல்வீச்சுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி