புதுடெல்லி:

போர் சூழலில் அதீத தேசப்பற்றை ஏற்படுத்த தொலைகாட்சிகள் முயற்சிப்பது மோதலை ஏற்படுத்தும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரையின் விவரம் வருமாறு:

நினைத்தே பார்க்க முடியாத நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. முதல்முறையாக அணு குண்டு வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்கள் எல்லையை தாண்டுகின்றன.
தாக்குதலை நடத்துகின்றன. இரு தரப்பிலும் இழப்பு ஏற்படுகிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாமை பாகிஸ்தானுக்குள் சென்று அழித்தபிறகு, அணு ஆயுத போராக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

அதற்கான சூழல் இரு நாட்டு எல்லையிலும் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தால் அந்நாட்டின் நரம்பிலேயே இறை நம்பிக்கை முறுக்கேற்றப்பட்டுள்ளது.

இந்துத்வா இந்தியாவால் அபாயம் இருப்பதாகச் சொல்லி, ராணுவத்துடனும் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்புடனும் சமரசப் போக்குடன் பாகிஸ்தான் செல்ல வேண்டியுள்ளது.

ராணுவத்தைச் சார்ந்தே பாகிஸ்தான் பிரதமர் இருந்தாலும், கடந்த சில நாட்களில் அவர் அமைதி வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். அதேசமயம் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

இந்தியா தொடர்ந்து தீவிரவாத தாக்குதலை சந்தித்து வந்திருந்தாலும், புல்வாமா தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், புல்வாமாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தை இனவெறி மற்றும் மத வெறுப்பு ஆக்கிரமித்திருக்கும் சூழலில், இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது.

இந்தியாவின் தேச நலனை மேம்படுத்துவது அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக் கூடாது. தேசப்பற்றோடு இருப்பதில் போட்டி இருக்க வேண்டும்.
தொலைக்காட்சிகளில் தேர்தல் மேடையிலும் போரிலும் அதீத தேசப்பற்று இருப்பது போல காட்டுகிறார்கள். இத்தகைய தொலைக் காட்சிகளின் போக்கு, இந்தியாவின் சமூக கட்டமைப்பை மட்டும் சீர்குலைக்கவில்லை, தேவையில்லாத மோதலையும் ஏற்படுத்துகிறது.
பழிவாங்குதல், தண்டிப்பது மற்றும் தியாகிகள் பட்டம் எப்போதுமே நம் ராணுவத்தில் இருந்ததில்லை.  அரசியல் நோக்கத்தோடு செயல்படும்போது தடுப்பு, இணக்கம் மற்றும் அழுத்தம் ஏற்படுவதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அதற்கு ராணுவத்தை கருவியாக பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.