ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரும், ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமான  சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்  தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும், தினசரி பாதிப்பு  40ஆயிரத்தை கடந்தே வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் சுமார் இரண்டரை லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆனால், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மத்தியஅரசு இதுவரை எந்தவித நிதி உதவியும் செய்ய வில்லை என மாநில முதல்வர்  சந்திரசேகரராவ்  மோடி அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (நவம்பர் 7ந்தேதி), நடிகர் சிரஞ்சீவி சகநடிகரான நாரார்ஜுனாவுடன் சேர்ந்து, மாநில முதல்வர்  கே.சந்திரசேகரராவை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து தொடர் இருமல் சளியால் பாதிக்கப்பட்ட சிரஞ்சீவிக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவருடன் இருந்த நாகார்ஜூனா உள்பட அனைவரும் தொற்று சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.