சென்னையில் மீண்டும் பயங்கரம்: இரண்டு மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் !

ரண்டு மாத குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் 5-வது தெருவை சேர்ந்தவர்கள் வெங்கண்ணா – உமா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சார்விக் என பெயரிட்டனர்.

நேற்று முன்தினம் இரவு புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டை திறந்துவைத்து தூங்கியபோது வீட்டில் படுத்திருந்த குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்

இதையடுத்து  வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல்நிலைய காவலர்கள், விசாரணையத் துவக்கினர். முதற்கட்டமாக  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர்.  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் இரவு 2 மணியளவில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் தனியாக அந்த வழியாக நடந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை ஏரியில் சடலமாக மீட்கப்பட்டது. காவலர்களுக்கு குழந்தையின் தாய் உமா மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து உமாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது குழந்தையை கொன்றதை உமா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து குழந்தையை கொன்ற புகாரில்  அவர் கைது செய்யப்பட்டார்.

பாலூட்டும் போது மார்பகத்தில் அதிக வலி  ஏற்பட்டதால் குழந்தையை கொன்றதாக உமா  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அபிராமி என்ற  சென்னை பெண்மணி தனது இரு குழந்தைகளைக் கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது