ஸ்டாக்ஹோம்:

ஸ்வீடனில் மக்கள் நடமாடும் டிராட்டிங்ஹாட்டன் பகுதி சந்தையில் திடீரென டிரக் ஒன்று புகுந்து மோதியதில் 3 பேர் பலியாயினர்.

ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம் நகரில் டிராட்டிங்ஹாட்டன் என்ற பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் டிரக் ஒன்று அசுர வேகத்தில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. டிரக் வேகமாக வருவதை கண்ட மக்கள் அலறி அடித்துகொண்டு ஓடினர். எனினும் இதில் 3 பேர் டிரக்கில் சிக்கி பலியாயினர்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது விபத்தா? அல்லது பயங்கரவாதிகளின் சதி இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வாகன தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் தான் இந்திய தூதரகம் இருந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவத்தின் அனைத்து சூழல்களையும் பார்க்கையில் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக தெரிகிறது என்று அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,‘‘இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஸ்வீடனுக்கு இந்தியா துணை நிற்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.