குவாதர்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவாதர் நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இந்திய பெருங்கடலையும் சீனாவின் ஜின்ஜியாங் மாநிலத்தையும் இணைக்கும் வகையில் சீன அரசு ஒரு துறைமுகத்தை பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் அமைத்ஹ்டு வருகிறது. இதை ஒட்டி இந்த நகரம் தற்போது மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது.

இந்த துறைமுகம் அமைக்கப்பட்டு வரும் பகுதிக்கு மிக அருகில் ஒரு நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதிக்குள் சில தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இந்த விடுதியின் உள்ளிருந்து சரமாரியான துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும் அதை தொடர்ந்து மக்கள் அலறிய சத்தம் வந்ததாகவும் பாகிஸ்தான் செய்தி ஊடகமான டான் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் எவ்வித தகவலும் அதிகாரபூர்வமாக அளிக்கப்படவில்லை. அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெயர் தெரிவிக்க விரும்பாத காவல்துறை அதிகாரி அந்த விடுதிக்குள் வெளிநாட்டினர் யாரும் தங்கி இருக்கவில்லை என கூறியதாக டான் ஊடகம் தெரிவிக்கிறது. அத்துடன் அந்த ஊடகம் இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.