தமிழக மலைப்பகுதிகளை பயங்கரவாதிகள், பயிற்சிக்களமாக மாறியுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

மிழகத்தின் மலைப்பகுதிகள் பயங்கரவாதிகள் பயிற்சிக் களமாக மாறி உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்ரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சிகளை செய்து, பயிற்சிக்களமாக மாற்றிக்கொண்டு உள்ளனர்.  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல்வேறு பயங்கரவாதிகள் ஊடுருவி சோதனை களமாக வைத்திருந்தனர் என்று கடந்த ஒன்றரை வருடங்களாக கூறி வந்தேன். ஆனால் இதை அரசு, காவல்துறை, உளவுத்துறை என எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன் விளைவுகளை தற்போது தமிழகம் காண தொடங்கிவிட்டது. காளிதாஸ் என்பவர் தமிழகத்தில் எங்கு எல்லாம் பயிற்சி நடக்கிறது என்று சொல்லி இருப்பதாக நாளிதழ்களில் தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.  கூடிய விரைவில் தமிழகம் கலவர பூமியாக மாறும். நக்சலைட்டுகள் மக்களை நிம்மதியாக வாழவிடாமல் தங்களுடைய பயங்கரவாத ஆட்சியை நிலைநிறுத்தப்போகிறார்கள்.

பயங்கரவாதிகள் எந்த அளவிற்கு தமிழகத்தில் பரவிக்கொண்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  இதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.

ஊடகங்களை சேர்ந்தவர்கள் தமிழகம் நன்றாக இருக்க வேண்டும். ஜனநாயகம் தழைத்து ஓங்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களையும் தோலுரித்து காட்டவேண்டும். இல்லை என்றால் ஊடகங்களுக்கும் அவர்கள் மிகப்பெரிய சவாலாக வருவார்கள்.

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் தமிழ் பெயரை சொல்லி பேசும் பிரிவினைவாத இயக்கங்கள் என பல அமைப்புகளில் இங்கே ஊடுருவி உள்ளனர். ஊடகங்களிலும் ஊடுருவியிருக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு விரைந்து செயல்படவில்லை என்றால் தமிழக மக்கள் மிகப்பெரிய அழிவை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.

பயங்கரவாதிகளை ஒடுக்க தமிழக அரசு சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்தவேண்டும்.

ஜெயலலிதா காலத்திலேயே பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று சொன்னபோது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அரசும் நடவடிக்கை எடுக்காமல் சாதாரணமாக விட்டால் எம்.ஜி.ஆருக்கு செய்யும் துரோகமாகும்.

1977-ல் எம்.ஜி.ஆர். எடுத்த முதல் நடவடிக்கை நக்சலைட்டுகளை விரட்டியடித்தது. வால்டர் தேவாரத்திற்கு முழு அதிகாரம் தந்து விரட்டினார். அந்த வழியை கடைபிடித்து காவல்துறைக்கு முழு அதிகாரம் தரவேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய அரசாங்கம் தேவையில்லை. 7 கோடி மக்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய அரசு தான் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது”  என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.