நாக்பூர்:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே கடோல் தாலுகா பாஜ சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் சலீம் இஸ்மாயில் ஷா. இவர் கடந்த 12ம் தேதி ஸ்கூட்டரில் 15 கிலோ இறைச்சியை கொண்டு சென்றார். வீட்டிற்கு வரும் வழியில் பாராசிங்கி அருகே ஜலல்கேதா பகுதியில் 4 பசு பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி தாக்கினர்.

சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு ஆதரவாக அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சி பரிசோனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அதன் முடிவு வந்துள்ளது. அதில் சலீம் இஸ்மாயில் ஷா வைத்திருந்தது மாட்டு இறைச்சி என்பது நிரூபிக்கப்ப்டடுள்ளது.

இது குறித்த நாக்பூர் எஸ்.பி. சைலேஷ் பல்காவதே கூறுகையில்,‘‘ அனைத்து சட்ட நடைமுறைகளும் விரைவில் முடிக்கப்படும். மாட்டு இறைச்சி வைத்திருந்தால் ஒரு ஆண்டு வரை சிறையும், அபராதமும் வித க்க சட்டத்தில் இடம் உள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

ஆய்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி பாஜ நாக்பூர் மாவட்ட தலைவர் ராஜிவ் போட்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் சிறுபான்மை பிரிவு தலைவர் ரம்ஜான் அன்சாரி மூலம் சலீமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.