டெஸ்ட் கிரிக்கெட் பாதுகாக்கப்பட வேண்டும்: விவியன் ரிச்சர்ட்ஸ்

ஆண்டிகுவா: டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் ஒரு உயர்ந்தபட்ச அம்சம் என்றும், எனவே அந்த ஆட்டமுறை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்ஸ்.

ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நான் மிகவும் ஆர்வத்துடன் கவனிக்கிறேன். நாங்கள் இங்கிலாந்தை வென்றோம். ஆனால், இந்தியா விஷயத்தில் அப்படி சொல்லிவிட முடியவில்லை. ஏ‍ெனினல், இந்த அணியில் பும்ராக்களும், ஷமிகளும், குமார்களும் இருக்கிறார்கள்.

எனவே, மேற்கிந்திய தீவுகள் அணி நிறைய மெனக்கெட வேண்டும். உலகின் பல சிறந்த ஜாம்பவான் வீரர்களுடன் விளையாடிய பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். இன்றைக்கு இருக்கும் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகள் போன்றவை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்துதான் தோன்றின. எனவே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்றைய நிலையில், பேட்ஸ்மென்களுக்கு பல சாதகமான அம்சங்கள் உள்ளன. எங்கள் காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. விராத் கோலியின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மைதானத்தில் நடந்துகொள்ளும் விதத்தில் எங்கள் இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அவர் அணியை வழிநடத்திச் செல்லும் விதத்தை நான் மிகவும் விரும்புகிறேன். அவரின் நடவடிக்கைகளில் நான் எனது பல நடவடிக்கைகளை காண்கிறேன்” என்றார் விவியன்.