சென்னை: திமுக குறித்து அவதூறு பரப்புவதற்காக, ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தப்படுவது குறித்து, அந்நிறுவனம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த சில ஏர்டெல் பயனாளர்களின் மொபைல் ஃபோன்களுக்கு, ‘Bz-Alerts’ என்ற குறியீட்டில், “இந்துக்களை அவமதிக்கும் திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்” என்ற டெக்ஸ்ட் மெசேஜ் வந்துள்ளது.

அத்தகைய செய்தியைப் பெற்ற ஒருவர், இதுதொடர்பாக தேர்தல் கமிஷனிலேயே புகாரளித்துவிட்டார். “ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைப் பற்றி ஏர்டெல் சார்பாக இப்படி எதிர்ப்பு செய்தி அனுப்பப்பட்டதை எதிர்த்தே நான் புகார் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார் அவர்.

ஆனால், இதை முற்றிலும் மறுத்துள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய நெட்வொர்க் சில நபர்களால், தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு டெலிமார்க்கெட்டிங் நிறுவனம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக ஏர்டெல் தரப்பில் கூறுகிறார்கள்.

மேலும், ஏர்டெல் சார்பாக, சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி