சூரத் :

ந்திய பொருளாதாரமும் கொரோனா வைரசும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பொருளாதாரம் பாதாளத்தை நோக்கியும், கொரோனா வைரஸ் வின்னைநோக்கியும் பாய்ந்து கொண்டிருக்கிறது.

விவசாய உற்பத்தி நீங்கலாக மற்ற அனைத்து உற்பத்தித்துறையும் சரிவில் சென்று கொண்டிருப்பதாக நாட்டின் நிகர உற்பத்தி (GDP) புள்ளிவிவரம் காட்டுகிறது.

வெறிச்சோடிய சந்தை – படம் நன்றி NYTimes

 

உலகளவில் ஜவுளி உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், ஏற்றுமதியில் மூன்றாவது இடத்திலும் இருக்கும் இந்தியாவில், மும்பை, கோவை, சூரத் ஆகிய நகரங்கள் முக்கிய பங்களிக்கின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 65 சதவீதம் உள்நாட்டுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் நிலையில், உள்நாட்டுத் தேவையில் 90 சதவீதம் சூரத்தில் உற்பத்தியாகும் துணிகளாகவே உள்ளது, இங்கு பெரும்பாலும் பாலியஸ்டர் இழைகளால் ஆன துணிகளே உற்பத்தி செய்யப்படுகிறது.

சூரத் நகரின் கடட் காம், மஃதள்ளா, உதானா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் ஜவுளிகள், ஸம்பா பஜார், பாம்பே மார்க்கெட், ஜெ ஜெ டெக்ஸ்டைல் மார்க்கெட் மற்றும் ஜாஸ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் விற்கப்படுகிறது.

பரபரப்பின்றி காணப்படும் சாலைகள் – படம் நன்றி NYTimes

நாளொன்றுக்கு சுமார் 4 கோடி மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட சூரத் நகரில் ஊரடங்கிற்குப் பின் இப்போது 10 சதவீதத்திற்கும் குறைவாக அதாவது 25 லட்சம் மீட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதேவேளையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நாளொன்றுக்கு 5.5 கோடி மீட்டராக இருந்த உற்பத்தித் திறன், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் நலிவடையத் துவங்கி தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

ஊரடங்கு காரணமாக கிராமங்களுக்குத் திரும்பிச் சென்ற பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வரவில்லை என்பதாலும் ஜவுளி விநியோகஸ்தர்களும் ஆர்டர்கள் வழங்குவதில்லை என்பதாலும் சூரத் நகரில் அநேகமாக அனைத்து தொழிற்சாலைகளுமே மூடியிருக்கிறது என்று கூறுமளவிற்கு உள்ளது. மேலும், ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் உற்பத்தியான ஜவுளிகளும் ஒருபுறம் மலைபோல் தேங்கி இருக்கிறது.

தேங்கிக்கிடக்கும் ஜவுளிகள் – படம் நன்றி NYTimes

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின் இந்தியா முழுவதும் மக்கள் நடமாட்டம் சராசரியாக 40 சதவீத அளவிற்கு சரிந்துள்ளது என்று கூகிள் மொபிலிட்டி தரவுகள் கூறும் நிலையில் அனைத்துத் துறைகளும் மீண்டும் உயிர்ப்புடன் செயல்படுவது எப்போது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

பா.ஜ.க. இந்தியாவைக் கைப்பற்ற அடித்தளமாக இருந்த குஜராத்திலேயே மக்கள் வியாபாரமின்றி, வேலையிழந்து, வாழ்வாதாரமின்றி உழன்று வரும் நிலையில், கோவை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற இடங்களில் உள்ள உற்பத்தி சார்ந்த தொழில்களின் நிலை மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.

“5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் கனவு நிறைவேறுவது எப்போது, சீனாவை நாம் பொருளாதாரத்தில் மிஞ்சுவது எப்போது” என்று அனைவரும் புலம்பிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், பொருளாதாரத்தை பின்னிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விலகியதும் புதிய இந்தியா பொலிவுடனும் நிறைவுடனும் பிறக்குமா என்று ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர் குஜராத் மக்கள்.