சென்னை: தனது மக்கள்தொகையில் 21.3% பேர் ‘பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள்’ என்ற நிலையில் இருப்பதால், சென்னை பிராந்தியத்தில், தேனாம்பேட்டை மண்டலம், கொரோனா அபாயம் அதிகமுள்ள பகுதியாக, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஒரு ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஏனெனில், தேனாம்பேட்டையின் கொரோனா மரண விகிதம் 2.98% என்பதாக இருக்கிறது. இது சென்னை பிராந்தியத்தில் மிக அதிகம். மேலும், இதர நோய்களால் அவதிப்படுவோரை அதிகம் கொண்ட மண்டலமாகவும் இது திகழ்கிறது.
இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில், சென்னையின் 15 மண்டலங்களில் வாழும் 61.73 லட்சம் மக்களில், யார் அதிக அபாயத்தில் உள்ளனர்? என்பதைக் கண்டறிவதற்காக ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டது சென்னை மாநகராட்சி.
இந்த ஆய்வின் மூலம், தேனாம்பேட்டை குறித்த நிலவரங்கள் தெரியவந்துள்ளது. அந்த மண்டலத்தில்தான், 60 வயதிற்கு மேற்பட்ட அதிக மூத்த குடிமக்கள் வாழ்கிறார்கள். அங்கு 97636 மூத்த குடிமக்களும், 20040 சர்க்கரை நோயாளிகளும் உள்ளனர். இந்த மண்டலத்தில் மொத்தமாக 6.12 லட்சம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.