Random image

குகையில் சிக்கி உள்ள தாய்லாந்து கால்பந்தாட்ட சிறுவர்கள் பெற்றோருக்கு உருக்கமான கடிதம்

தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்களும், அவர்களை அழைத்துச் சென்ற பயிற்சி யாளரும், பெற்றோர்களுக்கு உருக்கமான கடிதங்களை எழுதியுள்ளனர். இது பெரும் பரபரப்பையும் சோகத்தை  ஏற்படுத்தி  உள்ளது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் 10 நீளம் கொண்ட தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இதை சுற்றிப்பார்க்க சென்ற  11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது துணை பயிற்சியாளர் ஒருவரும் குகைக்குள் சென்றிருந்தபோது, வெளியே பெய்த மழை காரணமாக உள்ளே சிக்கிக் கொண்டனர்.

மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் குகைக்குள் சூழ்ந்துள்ள நிலையில், அவர்களை வெளியே வர முடியாமல் கடந்த 2 வாரமாக தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அவர்களை மீட்க சென்ற முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அந்த சிறுவர்களை மீட்கும் பணிகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், குகையில் சிக்கி உள்ள அந்த சிறுவர்களின் பயிற்சியாளர் அந்த சிறுவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த கடிததத்தில், அனைத்து பெற்றோருக்கும், உங்கள் பிள்ளைகள் தற்போது வரை நலமாக உள்ளனர். உங்கள் பிள்ளைகளை நான் மிக நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன். இதுபோன்ற ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக, பிள்ளைகளின் பெற்றோரிடம், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளதாக கூறப்படுகிறது.

குகைக்குள்  சிக்கி உள்ளவர்களுக்கு  தேவையான உணவுப்பொருட்களை மீட்பு படைவீரர்கள் கொடுத்து வருகின்றனர். அவர்களிடம் இந்த கடிதத்தை கொடுத்து அனுப்பி இருப்பதாக கூறப்படு கிறது.

மேலும் குகையில் சிக்கி உள்ள பலர், தங்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறும் வகையில் கடிதங்களை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில்  குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருவதாகவும், தற்போது அங்கு மீண்டும்   மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மீட்பு பணியில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால் உள்ளே சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.