சிகிச்சைகள் முடிந்து பாதுகாப்பாக வீடு திரும்பிய தாய்லாந்து சிறுவர்கள்

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் சிகிச்சை முடிந்து பாதுகாப்பாக வீடு திரும்பினர். மருத்துவமனையில் இருந்து சிறுவர்கள் வீடு திரும்பும் முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில் இந்த நிகழ்வுக்கு பிறகு சிறுவர்களில் வாழ்வில் ஊடகங்கள் தலையீடு இருக்க கூடாது என்று கருதப்படுவதாக தாய்லாந்து அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

thai-cave-boys

தாய்லாந்தில் உள்ள சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்த குகை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது. ஆசியாவிலேயே மிகபெரிய குகையாக தாம் லுவாங் குகை கருதப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 23ம் தேதி 11 முதல் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் வைல்டு போர் என்னும் பயிற்சிக்காக குகைக்குள் சென்றனர். சிறுவர்களுக்கு உதவியாக துணை பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் சென்றார்.

சிறுவர்கள் குகைக்குள் சென்ற சில மணி நேரங்களில் தீடீரென மழை பொழிந்ததால் குகை முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது. நீரும், சேறும் சேர்ந்த மோசமான சூழலில் வெளி வரமுடியாமல் குகைக்குள்ளேயே சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த தகவல் அறிந்த தாய்லாந்து அரசு உடனடியாக சிறுவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததுடன் அண்டை நாடுகளின் உதவியையும் நாடியது.

தாய்லாந்து அரசின் கடற்படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பிற நாட்டை சேர்ந்த மீட்பு படையினர் ஒன்றிணைந்து 18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சிறுவர்களையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக மீட்டனர். அதன்பின்னர் மீண்டு வந்த சிறுவர்களுக்கு உலக நாடுகள் அனைத்தும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டது.

சிறுவர்கள் குகையில் இருந்த 18 நாட்களும் உணவு, நீர் உள்ளிட்டவைகளை சரியாக எடுத்து கொள்ளாததால் அவர்களுக்கு முழு மருத்துவ உதவிகளையும் தாய்லாந்து அரசு வழங்கியது. சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை அனைவரும் வீடு திரும்பினர்.

செய்தியாளர்களை சந்தித்த சிறுவர்கள் தங்கள் அனுபவங்களை பின்வருமாறு பகிர்ந்து கொண்டனர்.

“அந்த பயணம் எங்களுக்கு மாயாஜாலம் போன்று இருந்தது என்றான் ஒரு சிறுவன். மற்றொரு சிறுவனோ, குழுவாக நாங்கள் குகையில் இருப்பதற்கு சண்டைகள் எழுந்தன. இருப்பினும், சண்டை போடாதீர்கள் என்று கூறினேன். அனைவரும் விரக்தி அடைந்தனர் என்றான். டீ என்ற பெயருடன் அழைக்கப்படும் மற்றொரு சிறுவனோ, நாங்கள் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு அங்கும் இருந்தோம் என்றார். இன்னொரு சிறுவன், முதல் நாள் நாங்கள் நன்றாக இருந்தோம். அடுத்த இரண்டு நாட்களில் அனைவரும் சோர்வடைந்தோம்” என்று கூறினார்.