அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூசம் கோலாகலம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார்  ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று  ஜீவகாருண்ய நெறிகளை போதித்த அருட்பிரகாச வள்ளலார்; வடலூர் சத்திய ஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

பூச நட்சத்திரத்தன்று வள்ளலார் சமாதியானதை குறிக்கும் விதமாக வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும். மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள். வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

1. கறுப்புத்திரை – மாயசக்தி,
2. நீலத் திரை- திரியா சக்தி,
3. சிவப்புத் திரை – இச்சாசக்தி,
4. பச்சைத்திரை- பராசக்தி,
5. பொன்திரை- ஞானசக்தி,
6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,
7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

இந்த ஆண்டு வள்ளலாரின்  148-வது ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று தருமசாலையில்  கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அடுத்து மருதூர், கருங்குழி ஆகிய கிராமங்களில் கொடியேற்றப்பட்டு, ஞானசபையில் கொடியேற்றப்பட்டது.

இன்று ( திங்கள்கிழமை)  காலை 6 மணிக்கு  முதற்கால ஜோதி  தரிசனம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம்செய்தனர்.

இதைத் தொடர்ந்து, காலை 10 மணி, பிற்பகல் 1 மணி,  இரவு 7 மணி மற்றும்  இரவு 10 மணிக்கும் ஜோதி தரிசனம்  நடைபெற உள்ளது.

நாளை  செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும்.

வள்ளலார் தைப்பூச  ஜோதி தரிசனத்தை முன்னிட்டு  கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மது மற்றும் மாமிசக்  கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.