இன்று தைப்பூசம்…. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

இன்று தைப்பூசம்… உலகம்  முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் கடவுளான அழகன் முருகனுக்கு உகந்த  திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில்  ஆறுபடை வீடுகள் உள்பட உலகம் முழுவதும் உள்ள   அனைத்து முருகன் கோவில் களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

10 நாட்களாக நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவில் கடைசி நாளன்று தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள், பல்வேறு வகையான  காவடி, பால்குடம்  போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

தேவர்களுக்கு ஆதரவாக அசூரர்களை அழிக்க, பார்வதிதேவி முருகனுக்கு ஞானவேல் அளித்த தினமான தை மாதத்தின் பூச நட்சத்திர தினமான  இன்று, தைப்பூசம் கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.

இந்த ஞானவேலை, முருகனுக்கு பார்வதி தேவி, ஆண்டி கோலத்தில் பழனி மலையி ல் வீற்றிருந்த முருகனுக்கு அங்கு வந்து கொடுத்ததால், தைப்பூசம் மற்ற கோவில்களைவிட பழனி கோவிலில்  மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஞானவேலின் உதவி கொண்டே  முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களை காப்பாற்றிய தாகவும், அவர்களை திருச்சீரலைவாயில் எனப்படும் திருச்செந்தூரில் வதம் செய்தாகவும் ஐதிகம்.

அதன் காரணமாகவே முருக பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கி, சஷ்டி கவசம் பாடி தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பது வழக்கம்.

இந்த விரதம் இருக்கும் பக்தர்கள் பெரும்பாலும்  பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வந்த இறுதிநாளான தைப்பூசம் அன்று நேர்த்திக் கடனாக முருகனுக்கு பக்தர்கள்  காவடி எடுக்கிறார்கள். காவடிகளில் பல வகை உண்டு.

அலகு குத்துதல், சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள். மேலும்,  சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, பால் காவடி,  மச்சக்காவடி, மயில் காவடி போன்ற காவடிகளை, ஒவ்வொருவரும் அவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி முருகனின் அருளை பெற்று செல்கிறார்கள்.

 

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது

கார்ட்டூன் கேலரி