தமிழருவி மணியனும் பழ.கருப்பையாவும்..!

சுயசாதி பாசம் கொண்டவர் மற்றும் சந்தேகத்திற்குரியவர் என்று செயல்பாடுகளின் அடிப்படையிலான வலுவான விமர்சனத்தை தாங்கிய கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, தேர்தலில் போட்டியிட உள்ளார் பழ.கருப்பையா! அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழருவி மணியனின் அரசியல் செயல்பாடுகள், கிட்டத்தட்ட தமிழருவி மணியனை ஒத்தவை என்றே மதிப்பிடலாம். இவர்கள் முன்னிறுத்தும் கோட்பாட்டிற்கும், இவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்கும் அதிக முரண்பாடுகள் இருக்கும்.

கலைஞர் கருணாநிதியின் கடைசி காலத்தில், திமுகவில் வந்து மீண்டும் இணைந்த இவர், கலைஞர் கருணாநிதி மறைந்த பிறகு, தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில், கலைஞர் கருணாநிதியைப் பற்றி பேசுகையில் கதறி அழுதார். தமிழ்நாட்டில் வாழ்ந்த உண்மையான ஒரிஜினல் தலைவர்களில், ராஜாஜி, காமராஜர், அறிஞர் அண்ணா வரிசையில், கலைஞரை மட்டுமே வைத்து குலுங்கி அழுதார்!

ஆனால், அந்தளவிற்கு கலைஞர் கருணாநிதியை மதிப்பிட்ட பழ.கருப்பையா, எதற்காக திமுகவிலிருந்து நீண்டகாலம் வெளியிலேயே இருந்தார்? என்ற கேள்வி எழுகிறது. ‘கருணாநிதி என்ன கடவுளா?’ என்ற தனிப் புத்தகத்தையே ஏன் எழுதினார்?

ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அதிமுகவில் இணைந்து, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் நின்று, முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்! பின்னர், அக்கட்சியிலிருந்தும் வெளியேறி, தனது பதவியை ராஜினாமா செய்து, விமர்சனங்களை முன்வைத்தார்.

இப்படியாக, காரைக்குடி நகராட்சியிலிருந்து துவங்கிய இவரின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் எத்தனையோ விமர்சனங்கள்! கலைஞர் கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு, திமுகவையும், ஸ்டாலின் தலைமையையும் விமர்சித்து அதிலிருந்து வெளியேறி சிலகாலம் ஒதுங்கியிருந்தார்.

தற்போது, அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், கமலஹாசனின் கட்சியில் இணைந்து, தேர்தலிலும் போட்டியிட உள்ளார். கமலஹாசனிடம் எத்தகைய ஒளிவட்டத்தைக் கண்டடைந்தார் என்று தெரியவில்லை..! இன்னும் சிறிதுகாலத்தில், அக்கட்சியிலிருந்தும் வெளியே வந்தால், அதற்கும் ஏதேனுமொரு காரணத்தை சொல்வார்.

பழ.கருப்பையா, தமிழருவி மணியன் மற்றும் வலம்புரிஜான் என்று நீளும் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும், இந்த இடத்தில் சுப.வீரபாண்டியன் போன்றவர்களையும் நாம் நினைவில் கொண்டுவர வேண்டியுள்ளது.

‍பெரியாரிய வழித்தடத்தில் அழுத்தமாக எப்போதும் நின்றுகொள்ளும் சுப.வீரபாண்டியன், திமுகவின் பல செயல்பாடுகள் விமர்சனத்திற்குரியவையாக இருந்தாலும்கூட, தனக்கேற்ற குறைந்தளவு அம்சங்களேனும், இன்றைய சூழலில் அந்தக் கட்சியில் மட்டுமே கிடைக்கும் என்று உறுதியான முடிவெடுத்து, அந்த கட்சியின் தீவிர ஆதரவாளராகவே செயல்பட்டு வருகிறார்! வேறுசில பெரியாரிஸ்டுகள் போல, ‘ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் பட்டம்’ போன்ற செயல்களிலெல்லாம் அவர் ஈடுபடவில்லை.

அரசியல் என்று வருகையில், உண்மையிலேயே, இந்த சமூகத்திற்கு ஏதேனும் குறைந்தளவு நன்மையேனும் செய்ய நினைத்தால், சில சமரசங்களை நிச்சயம் செய்தே ஆக வேண்டும். அதுதான் நமது சிஸ்டம்! தனக்கேற்ற குறைந்தளவு பொருத்தம் கொண்ட ஒரு கட்சியை தேர்வுசெய்து கொள்ள வேண்டும்.

ஆனால், அத்தகைய சிறிய சமரசங்களை செய்துகொள்வதை, பெரிய அசிங்கம் என்று வசனம் பேசுபவர்கள், உண்மையிலேயே பல பெரிய அசிங்கங்களை தங்களின் பொது வாழ்க்கையில் சந்திப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்!