தாமிரபரணி வெள்ளம்: முக்காணி தடுப்பணை உடைந்தது

தூத்துக்குடி:

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கடந்த ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணி தற்போது செல்லும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வற்றாத ஜீவ நதியாக இருந்து வரும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் புன்னைக்காயல் பகுதியில்  கடலில் சங்கமிக்கிறது.  தண்ணீர் கடலில் வீணாக  கலப்பதை தடுக்கும் வகையில் குரங்கணி, ஆத்தூர் சொக்கப்பழங்கரை ஆகிய இடங்களில் தடுப்பணைகள்  கட்டப்பட்டது.

தடுப்பணை கட்டப்பட்டபோது எடுத்த படம்

இதற்காக 2014-15ம் ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.25.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையானது ஆற்றின் மொத்த அகலமான 520 மீட்டரில் 460 மீட்டரிலும், இரு கரையில் தலா 30 மீட்டர் தடுப்புகளும் 1.3 மீ உயரத்துடன் அமைக்கப்பட்டது.

இவ்வாறு தாமிரபரணி ஆற்றில் முக்காணியில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்ட தடுப்பணை பிளவு ஏற்பட்டு தகர்ந்து, தண்ணீர் வீணாக  வீணாக கடலில் கலந்து வருகின்றது. கடந்தஆண்டு வேலை ஆரம்பித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கட்டிமுடிக்கப்பட்ட இந்த தடுப்பனை தற்போதைய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பணை பகுதியில் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதால் வெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தடுப்பணை தகர்ந்து இரண்டாக பிளந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மண்மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆற்றின்  கரையை பலப்படுத்தாமல் தடுப்பணை கட்டியதோடு, தடுப்பணையை ஆழப்படுத்துவதாக கூறி லாரிகளில் மணலை கொள்ளையடித்து சென்றதால் அணை பிளவு பட்டு தண்ணீர் வீணாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கொம்பு மேலணை உடைந்த நிலையில், தற்போது தாமிரபரணி தடுப்பணை உடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.