Random image

திட்டமிட்டு கோஷம் எழுப்பிய ஷோபியா மீது சந்தேகம் : தமிழிசை

சென்னை

தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஷோபிய மீது சந்தேகங்களை தமிழிசை எழுப்பி உள்ளார்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் தமிழிசை சென்ற போது உடன் சென்ற கனடா மாணவி ஷோபியா பாஜகவை எதிர்த்து கோஷமிட்டதற்காக  கைது செய்யப்பட்டார்.   இன்று அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ள்ளார். இந்த நிகழ்வு குறித்து சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழிசை, “ஷோபியா விமானத்தில் என்னைப் பார்த்து பாஜக அரசை விமர்சித்து கோஷம் எழுப்பினார்.   நான் அங்கு அவருக்கு பதில் அளிக்கவில்லை.  விமான நிலையத்தில் இறங்கிய பிறகு அவரிடம் விமானத்தில் அவ்வாறு கோஷமிடுவது தவறு என கூறினேன்.  அவர் தமக்கு பேச்சுரிமை உள்ளதாகவும் அதனால் அப்படித்தான் கோஷம் இடுவதாகவும் தெரிவித்தார்.

எனக்கு அப்போது அவர் ஒரு சாதாரண பயணி இல்லை என்னும் சந்தேகம் எழுந்தது.    அவர் பின்னால் ஏதும் இயக்கம் இருக்கலாம் என்னும் ஐயத்தில் நான் விமான நிலைய காவல்துறியிடம் புகார் அளித்து அவர் பின்னணியை விசாரிக்க கோரிக்கை விடுத்தேன்.

விமானத்தில் ஏறும் போதே ஷோபியா தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடன் தமிழிசை பயணம் செய்ய உள்ளதால் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்ப போவதாக பதிவிட்டுள்ளார்.    இதில் இருந்து இது ஒரு திட்டமிட்ட செயல் என்பது தெளிவாகி உள்ளது” என குறிப்பிட்டார்.