வைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு

சென்னை
பாலியல் புகாரில் சிக்கி உள்ள கவிஞர் வைரமுத்து பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக டிவிட்டரில் பதிந்தார். அது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது. இது குறித்து பரபரப்பான வாக்கு வாதங்கள் நடந்த போது பேசாமல் இருந்த வைரமுத்து தற்போது ஆதாரம் இருந்தால் தன் மீது வழக்கு தொடரலாம் என கூறி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டு எழுந்து ஒரு வாரம் கழித்து அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளது குறித்து நெட்டிசன்கள் விதம் விதமான கருத்துக்கள் பதிந்து வருகின்றனர். “ஆதாரம் இல்லை எனில் கவிஞர் வைரமுத்து பாடகி மீது மான நஷ்ட வழக்கு தொடரலாமே” என பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.