லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் இருந்து லஞ்சப் பணத்துடன் தப்பிய காவலர்

தானே

ன்னை பிடிக்க வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் இருந்து பணத்துடன் காவலர் ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஒரு பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவரது கடை அம்பர்நாத் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. அந்தக் காவல் நிலையத்தில் புதியதாக பத்மாகர் அசவாலே என்னும் காவலர் பணிக்கு வந்துள்ளார்.

பத்மாகர் அந்த வியாபாரியிடம் அவரை எந்த ஒரு வழக்கிலும் சிக்காமல் காப்பாற்ற மாதம் ரூ.80000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து வியாபாரி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அவர்கள் காவலரை பிடிக்க ஒரு திட்டம் தீட்டி உள்ளனர்.

அந்த திட்டத்தின் படி வியாபாரி சகயாத்ரி சாலை என்னும் இடத்தில் காவலருக்கு ரூ.50000 லஞ்சமாக கொடுத்துள்ளார். உடனடியாக காவலரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சூழ்ந்துக்கொண்டுள்ளனர். அவர்களை தள்ளி விட்டு காவலர் லஞ்சப் பணத்துடன் மோட்டார் சைக்கிலில் தப்பி ஓடி விட்டார்.

லஞ்ச பணத்துடன் தப்பி ஓடிய காவலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.