வீடியோவுக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை! அவரே ஆர்.கே. நகரில் வெல்வார்!: தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அதிர்ச்சிகரமான யூகங்கள் பல உலாவருகின்றன. இந்த நிலையில் “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ” என்று இருபது விநாடி காட்சிப் பதிவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார்.

இது அரசியல்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் வழக்கும் தொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் டிடிவி ஆதரவாளபரான தங்கத் தமிழ்ச்செல்வனைத் தொடர்புகொண்டு பத்திரிகை டாட் காம் இதழுக்காக பேசினோம்.

 

அந்த வீடியோவை பார்த்தபோது உங்களுக்கு எப்படி உணர்ந்தீர்கள்..?

வீடியோவைப் பார்த்தவுடன் கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். ஜெயலலிதா என் மீது மிகுந்த பாசம் உள்ளவர்.  உரிமையுடன் தம்பி என்று அழைத்துப் பேசுவார்.

இறந்த நிலையில்தான் அவர் மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டார் என்று சிலர் பரப்பிய வதந்தியைக் கேட்டு கதறித் துடித்திருக்கிறேன்.

ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது  ஓரளவு மன நிம்மதி. உயிருடன்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.. அங்கு சிகிச்சை பலனளித்து தேறி வந்திருக்கிறார்.. ஆனாலும் எதிர்பாராத விதமாக உடல் நலம் பாதித்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது.

இன்னும் அவர் உயிருடன் இருப்பதாகவே உணர்கிறேன்.

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை அவர் மறைந்ததில் இருந்தே இருக்கிறது. இத்தனை நாள் கழித்து இன்று… ஆர்கே நகர் வாக்குப்பதிவு நாளை நடக்க இருக்கும் நிலையில் வெளியிடப்பட்டது என் என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?

உண்மையில் ஜெயலலிதா மரணத்தில் எந்தவித மர்மமும் கிடையாது. அவரை சசிகலா கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். உள்ளூர் மருத்துவர்கள், டில்லி மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள் என்று தலை சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் ஓபிஎஸ் போன்றவர்கள், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று பொய்யாக சொல்லி வருகிறார்கள். இதுவரை நாங்கள் பொறுத்துக்கொண்டோம். ஏனென்றால் இது குறித்து பேசினால்.. அது உண்மையாக இருந்தாலும்.. ஜெயலலிதா புகழுக்கு பங்கம் விளைவிக்குமோ என்று அஞ்சினோம்.

ஆனால் ஓபிஎஸ் போன்றவர்களின் பொய் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. ஆர்.கே. நகர் பிரச்சாரத்தில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று பொய் சொல்லி ஓட்டு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

இது குறித்து பொய்யான தகவல்களோடு பிட் நோட்டீஸ் போடும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது.

இதையெல்லாம் பொறுக்க முடியாமல்…. உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தான் வீடியோவை வெளியிட்டதற்கும் டிடிவி தினகரனுக்கும் தொடர்பில்லை என்று வெற்றிவேல் சொல்வது நம்பும்படியாக இல்லை என்று விமர்சனம் எழுந்திருக்கிறதே..

வீடியோவை வெளியிடுவது குறித்து டிடிவி தினகரனிடம் வெற்றிவேல் அனுமதி பெற்றாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

தான் மிகவும் மதிக்கும் தலைவியை சிலர் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் வெளியிட்டிருக்கிறார்.

டி.டி.வி. தினகரன் அனுமதி இல்லாமல் வெற்றிவேல் வெளியிட்டிருப்பாரா..

மீண்டும் அதையே கேட்கிறீர்கள். தனது தலைவியின் மரணத்தை சிலர் கொச்சைப்படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளியிட்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டேனே..

இது தேர்தல் விதி மீறல் என்று ஆணையம் சொல்லியிருக்கிறது. வெற்றிவேல் மீது வழக்கும் பதியப்பட்டிருக்கிறதே..

நாங்கள் ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ பற்றி எழுதி, குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பிட் நோட்டீஸ் போடவில்லை. இதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.  போட்டியிடுபவர் தினகரன். வீடியோவை வெளியிட்டவர் வெற்றிவேல். ஏன் தொடர்பு படுத்த வேண்டும்.

தங்களது வெற்றி வாய்ப்பை தடுக்க இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது என்று என்று அதிமுக தரப்பு கூறுகிறதே..

இந்த வீடியோவால் அவர்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரனுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று தெரிந்துவிட்டது. கருத்துக்கணிப்புகளும் அப்படித்தான் சொல்கின்றன. மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதை பிரச்சாரங்களின்போதே தெரிந்துகொள்ள முடிகிறது.

தவிர, ஜெயலலிதா மறைவில் மர்மம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார்கள் அவர்கள். அது பொய் என்பதை வெளிப்படுத்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கும் தேர்தலுக்கும் ஏன் முடிச்சுப்போட வேண்டும்?

அவர்களிடம் மாநில அரசு, மத்திய அரசு, , தேர்தல் ஆணையம் எல்லாம் இருக்கின்றது. அவர்களே உண்மையை தெளிவு படுத்தட்டும். அல்லது தொடர்ந்து எங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டட்டும். எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்.

ஆனால்..

பொறுங்கள்.. வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரம் பேரை ஆர்.கே. நகரில் தங்கவைத்திருக்கிறார்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும்…  அதுமட்டுமல்ல… ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் என விநியோகித்திருக்கிறார்கள். மொத்தம் 120 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா நடந்துள்ளது   இது குறித்தெல்லாம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தலை சந்திக்க பயந்து, ரத்து செய்யும் நோக்கத்துடன் வீடியோ வெளியிடப்பட்டது என்றும் ஒரு விமர்சனம் உள்ளது..

நாங்கள்தான் வெற்றி பெறப்போகிறோம். தோல்வி பயம் இருப்பவர்கள்தான் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். கடந்த முறைகூட எங்களது வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து பயந்துதான் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் பதறினார்கள்.

ஆகவே உறுதியாகச் சொல்கிறேன்..  ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் வீடியோ வெளியிடப்பட்டதற்கும் எந்தத்  தொடர்பும் இல்லை. அத்தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெல்வார்.