சென்னை:

திமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய முக்கிய பிரமுகர்களுக்கு பதவிகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது, தங்கத்தமிழ்ச் செல்வன் மற்றும் வி.பி. கலைராஜனுக்கு பதவி வழங்கி கவுரவப்படுத்தி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சலசலப்பு எழுந்த நிலையில், முக்கிய பிரமுகர்கள் பலர் மாற்றுக் கட்சிகளை நோக்க ஓடிய நிலையில், முக்கிய தலைவர்கள் பலர் திமுகவில் ஐக்கியமாகினர்.  அவர்களில் திறமையான பலருக்கு உரிய பதவி வழங்கி திமுக கவுரவித்து வருகிறது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈபிஎஸ், ஓபிஎஸ் மீதான அதிருப்தியில்,  அதிமுகவில் இருந்த விலகி திமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்து, நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கொடுத்தார் ஸ்டாலின். அவரும் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக இருக்கிறார்.

இந்த நிலையில், அதிமுக, அமமுக கட்சியின் மீது அதிருப்தி கொண்டு, அங்கு விலகி ஸ்டாலின் முன்னிலையில்,  தங்கதமிழ்ச் செல்வன், வி.பி. கலைராஜன் போன்றோர் தங்களது ஆதரவாளர் களுடன் இணைந்தனர். தற்போது அவர்ளுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தங்கதமிழ்ச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  ஆ.ராசா – திருச்சி சிவா வரிசையில் தங்கதமிழ்ச் செல்வனும் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அப்போது  திமுக கலை இலக்கிய அணிச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்,  திமுக நெசவாளர் அணிச் செயலாளராக கே.எம்.நாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது.